இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதேபோன்று திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்குகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை விதிக்கப்பட்டது.
தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்.
குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை விதிக்கப்படும். பேருந்துகளின் ஜன்னலோரம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள திரைச்சீலைகளும் அகற்றப்படும்.
கால்டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்